இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனும் மதுரையைச் சேர்ந்தவருமான சச்சின் சிவா, சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் எஸ்இடிசி க்கு சொந்தமான கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்தில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை என கூறி பேருந்தில் ஏறக்கூடாது என கூறியுள்ளார்.
அப்போது சச்சின் சிவா, இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது என பதிலளித்துள்ளார். அதற்கு பஸ் கண்டக்டர் சிவா, உங்க முகத்தை உடைத்து விடுவேன். எனக்கு எல்லாம் தெரியும் என கூறி மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. நீ எங்க வேணா போ நான் இந்த பஸ்ல ஏற விட மாட்டேன் என்று கூறி சத்தம் போட்டுள்ளார். அதற்கு சிவாவும் பதிலுக்கு சண்டையிட்டு பேருந்து முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். இதனையடுத்து வேறு பேருந்தில் ஏறி மதுரைக்கு வந்து சேர்ந்தார் சச்சின் சிவா. தனக்கு நேர்ந்த அவமரியாதை குறித்து பேட்டியாக வீடியோ பதிவிட்டார் சச்சின் சிவா. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியானது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டன் சச்சின் சிவாவை அவமரியாதையாக நடத்திய பஸ் கண்டக்டரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.