சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: 4 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு மீட்புப் பணியினர் தீவிரம்
சென்னை பாரிமுனை பிராட்வேயில் பழமையான 4 மாடி கட்டிடம் இன்று இடிந்து விழுந்ததில் உள்ளே இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட சிக்கியுள்ள 4 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு மீட்புப் பணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை பிராட்வே அரண்மனைக்காரன் தெருவில் பழைய கட்டிடத்தில் உள்ள நான்காவது தளத்தில் புதுப்பிக்கும் பணி இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள மக்கள் பாரிமனை, பூக்கடை பகுதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனத்தில் வந்த 50க்கும் மேற்பட்ட மீட்புபடை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வந்ததால். உள்ளே எந்த குடும்பங்களும் வசிக்கவில்லையென கூறப்படுகிறது. அதே நேரத்தில் கட்டிடத்தில் பராமரிப்பு பணியில் 10 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். மீதமுள்ள 4 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டிட விபத்தில் சிக்கியவர்களை மீட்க அரக்கோணம் மற்றும் சென்னை அடையாறு பகுதியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நவீன உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.