ஆவடியில் ரூ. 1.87 கோடி ஏலச்சீட்டு மோசடி: கணவன் மனைவி கைது

165

திருவள்ளூர், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் உள்பட 350 நபர்கள் சேர்ந்து 14.09.2023 ம் தேதி அன்று சென்னை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.

அதில், வேப்பம்பட்டு, பெருமாள்பட்டைச் சேர்ந்த மஞ்சுளா அவரது கணவர் பிரேம் ஆனந்த் மற்றும் விக்னேஸ்வரி என்கிற அம்மு ஆகியோர் சேர்ந்து ஏலச்சீட்டு,  நகை பண்டு, மளிகை பண்டு, கடன் கொடுப்பது ஆகிய சீட்டுக்களை கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளனர். விஜயகுமார் மற்றும் (350 நபர்கள்), தொடர்ந்து 7 ஆண்டுகளாக சீட்டுகளுக்கு பணம் செலுத்தியுள்ளார்கள். கடந்த இரண்டு மாதங்களாக ஏலச்சீட்டு செலுத்திய யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. சீட்டு கட்டி வந்த அனைவரும் கடந்த 2 வாரமாக அவர்களிடம் பணத்தை கேட்டதற்கு பிறகு தருகிறோம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி இரவு மஞ்சுளா அவரது கணவர் பிரேம் ஆனந்த் மற்றும் விக்னேஸ்வரி என்கிற அம்மு ஆகியோர்கள் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது வீட்டிற்கு வந்துவிடுவோம். எங்களுக்கு சொந்தமான இரண்டு வீடுகளை விற்று அனைவரும் கட்டிய பணத்தை கொடுத்துவிடுவோம். என்று கூறியுள்ளனர். இந்நிலையில் 04.09.2023-ம் தேதி இரவு 11 மணிக்கு கடை மற்றும் வீட்டிலிருந்த பொருட்களை டெம்போ வாகனத்தில் ஏற்றிக் கொண்டு இரவோடு இரவாக தலைமறைவாகிவிட்டார்கள். சீட்டுகளின் மொத்த மதிப்பு ரூ. 1,87,54,000 -ஆகும். என அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர்.

அது தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடினர். அதனையடுத்து தனிப்படை போலீசார் மஞ்சுளா மற்றும் அவரது கணவர் பிரேம் ஆனந்த் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.