சென்னை, கொடுங்கையூர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த நபர்களை கத்தியைக் காட்டி மிரட்டி, தங்கச் சங்கிலி மற்றும் பணம் பறித்துக் கொண்டு தப்பிய 6 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 சவரன் தங்கச் சங்கிலி மற்றும், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த முதியவர் ரவி, 67 அவரது நண்பர்களுடன் கடந்த 23.08.2023 அன்று இரவு, எருக்கஞ்சேரி, மேற்கு இந்திரா நகர் பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 10 நபர்கள், ரவி மற்றும் அவருடன் சீட்டி விளையாடிக் கொண்டிருந்த நபர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருந்த சுமார் 2.5 சவரன் தங்கச்சங்கிலி, பணம் ரூ. 20,000- மற்றும் 5 செல்போன்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து ரவி கொடுத்த புகாரின்பேரில் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி அஜய் புத்தா, 28, வால்டாக்ஸ் சாலை பிரேம்குமார், 37, சவுகார்பேட்டை யுவராஜ், 25, ஓட்டேரி நவீன் (எ) சின்ன வடை, 18, வியாசர்பாடி நரேஷ்குமார் (எ) குரு, 30 ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 சவரன் தங்கச்சங்கிலி, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனம் மற்றும் 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், அஜய் புத்தா, கொலை, கொலை முயற்சி உட்பட 12 குற்ற வழக்குகளும், நரேஷ்குமார் (எ) குரு மீது கொலை உட்பட 3 குற்ற வழக்குகளும், பிரேம்குமார் மீது கொலை உட்பட 6 குற்ற வழக்குகளும், யுவராஜ் மீது கொலை உட்பட 4 குற்ற வழக்குகளும், பரத் மீது கொலை முயற்சி உட்பட 2 குற்ற வழக்குகளும், நவீன் மீது வழிப்பறி உட்பட 4 குற்ற வழக்குகளும். உள்ளது தெரியவந்தது.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (27.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.