சென்னை, அரும்பாக்கம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வடமாநில நபரை போலீசார் கைது செய்து 7.15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னை, அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் (PEW/Annanagar) தலைமையிலான காவல் குழுவினருக்கு 100 அடி சாலை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
சந்தேகத்தின்பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் பெயர் கமல் ஷில், 28, சென்னை மேடவாக்கத்தில் தங்கியிருந்த திரிபுராவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 7.15 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி கமல் ஷில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், சென்னையில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், திரிபுரா மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி கமல்ஷில் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.