வேலை வாங்கி தருவதாக, போலி இன்டர்வியூ நடத்தி ரூ. 1.50 கோடிக்கு மேல் மோசடி: முக்கிய நபரை கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் பழனி. 2019 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த நாகம்மாள் என்பவர் மூலம் ரேணுகா மற்றும் அவரது மகள் சியாமலீஸ்வரி ஆகியோர் பழனிக்கு அறிமுகமானார்கள். தங்களுக்கு மத்திய மாநில அரசு துறைகளில் பல்வேறு உயரதிகாரிகள் தெரியும் என்றும், பணம் கொடுத்தால் அவர்கள் மூலம் பல்வேறு அரசு துறைகளில் வேலைகள் வாங்கித் தர இயலும் என்றும், தங்களுக்கு State Bank of Indiaவில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினர்.
அதனையடுத்து பழனியிடமிருந்து வங்கிக் கணக்குகள் மூலமாகவும், நேரடியாகவும் ரூபாய் 3,37,000 பணம் பெற்றுக் கொண்டு கூட்டாக சேர்ந்து பழனிக்கு வேலை வாங்கி கொடுக்காமலும் பணத்தை திரும்பக் கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக, பழனி பணத்தை மீட்டுத் தரும்படி சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் P.K.செந்தில்குமாரி ஆலோசனையின்பேரில், வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்தனர்.
மேற்படி எதிரிகள் மத்திய அரசு நிறுவனங்களான பாஸ்போர்ட் அலுவலகம், குடியுரிமை பாதுகாப்பு அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு வங்கிகளில் மத்திய மற்றும் மாநில அரசு வேலைகள் வாங்கித் தருவதாக கூறி சுமார் 55க்கும் மேற்பட்ட வேலை தேடும் அப்பாவி நபர்களிடம் சுமார் 1.50 கோடிக்கு மேல் பணம் பெற்றுக் கொண்டு பெரிய நட்சத்திர ஓட்டல்களில் வைத்து அரசு அதிகாரி போல் செயல்பட்டு போலியாக நேர்க்காணல் நடத்தி மோசடி செய்துள்ளது என தெரியவந்தது.
அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, இவ்வழக்கில் அரசு அதிகாரி போன்று நடித்து மோசடியில் ஈடுபட்ட மாதவரத்தைச் சேர்ந்த சண்முகம் (37) என்பவரை இன்று (29.03.2024) காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சண்முகம் விசாரணைக்குப் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர். பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளின் நட்பு உள்ளது என்று கூறி அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை காட்டி அரசு வேலை வாங்கி தருவதாக கூறும் நபர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.