சிபிஐ அதிகாரிகள் போல பேசி ரூ. 50 லட்சத்தை அபேஸ் செய்த கேரளா ஆசாமிகள் நால்வரை தாம்பரம் காவல் ஆணையரக சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தாம்பரம், இரும்புலியூரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (52). இவர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ”44720754022 என்ற தொலை பேசி எண்ணிலிருந்து தொடர்பு கொண்ட நபர் TRAI யிலிருந்து பேசுவதாக கூறினார். நான் பயன்படுத்தி வந்த தொலைபேசி எண்ணிலிருந்து பெண்களை கொடுமைப்படுத்தும் விதமாக குறுஞ்செய்திகள் மற்றும் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தக் குற்றத்திற்காக மும்பை போலிஸ் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் அந்த நபர் தெரிவித்தார். மேலும் என்னை Skype செயலி மூலம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பண மோசடி வழக்கில் கைதான நபர்களுடன் எனக்கு தொடர்பிருப்பதாகவும் தெரிவித்த அந்த நபர் விசாரணைக்கு எனது வங்கிக் கணக்கிலிருந்து அவர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பணம் ரூ. 50 லட்சம் அனுப்புமாறும், இல்லையென்றால் கைது செய்து விடுவோம் எனவும் மிரட்டல் விடுத்தார். அதை நம்பி நான் பணத்தை அனுப்பினேன். ஆனால் இதுவரை நான் செலுத்திய தொகை திரும்பி வரவில்லை. என்னிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”” என தெரிவித்திருந்தார்.
அந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அமல்ராஜ் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் சுப்புலட்சுமிக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரூ. 50 லட்சம் அனுப்பப்பட்ட மோசடியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்ததில் மோசடி செய்யப்பட்ட பணமானது கேரளாவைச் சேர்ந்த அப்ரித், மற்றும் வினீஷ் ஆகியோரது வங்கிக் கணக்குகளில் பெறப்பட்டது தெரிய வந்தது. அதனையடுத்து தனிப்டை போலீசார் கேரளா மாநிலம் சென்று அப்ரித், முனீர், பசலு ரஹ்மான், வினீஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து குற்றத்திற்காக பயன்படுத்தப்பப்ட 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நால்வரும் தாம்பரம் குற்றவியல் நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
CBI போலிஸ் போல் ஆள்மாறாட்ட மோசடி (Fedex, CBI Police), பகுதி நேர வேலை மோசடி(Part time job) அல்லது டெலிகிராம் டாஸ்க் ஸ்கேம் தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் Cyber Help Line No. 1930 or National Cyber Crime Reporting Portal www.cybercrime.gov.in என்ற Website மூலம் புகார் அளிக்கலாம் அல்லது சைபர் கிரைம் காவல் நிலையங்களை அணுகுமாறும் பொதுமக்களை தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அஅமல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.