சென்னையில் ரூ. 23.25 கோடி போதைப் பொருள் சிக்கியது: தமிழக என்ஐபி சிஐடி போலீஸ் அதிரடி நடவடிக்கை

194

சென்னையில் ரூ. 23.25 கோடி மதிப்பிலான 93 கிலோ மெத்தகுலோன் போதைப்பொருளுடன் இருவரை தமிழக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (Norcatic intelligence buero CID) போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மகேஷ்குமார் அகர்வால், IPS., Adgp crime & Enforcement wing

போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு சி.ஐ.டி-யின் சென்னை பிரிவிற்கு போதைப்பொருட்களின் விற்பனை குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க குற்றம் மற்றும் அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் ஐஜி ராதிகா மேற்பார்வையில் ஒரு சிறப்பு குழு உருவாக்கப்பட்டது.

ராதிகா, IPS., IGP, CRIME
ராதிகா, IPS., IGP, CRIME

இந்தக் குழு 26-ம் தேதி (நேற்று), திருவொற்றியூரைச் சேர்ந்த நீலமேகன், (வயது 50) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 25 கிலோ மெத்தகுலோன் போதைப்பொருளை கைப்பற்றியது. மேலும், இதில் தொடர்புடைய வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 33 வயதுடைய மற்றொரு குற்றவாளியான சம்சுதீனை கைது செய்து அவரது வீட்டிலிருந்து 68 கிலோ மெத்தகுலோனை கைப்பற்றியது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு இந்தியாவில் தோராயமாக ரூ. 23.25 கோடி மற்றும் சர்வதேச மதிப்பு பலமடங்கு ஆகும். மேலும், இந்தக் குழுவினர் 97 கிலோ ஆம்ரோஸ் எனும் வேதிப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதன் தன்மையை ஆய்வக சோதனைகள் மூலம் கண்டறியப்பட வேண்டியுள்ளது. இது தொடர்பாக சென்னை என்.ஐ.பி.சிஐடி-யில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளின் முழு தொடர்புகளையும் வெளிக் கொண்டு வர விசாரணை நடத்தப்பட்டு வரப்படுவதாக ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார். ரூ. 23 கோடி போதைப் பொருட்களை கைப்பற்றிய சிறப்பு காவல் குழுவினரை ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பாராட்டி பண வெகுமதி அளித்தார்.

போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருள்களின் சட்ட விரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை இலவச தொலைபேசி எண். 10581, வாட்ஸ்அப் எண். 9498410581 மற்றும் மின்னஞ்சல் spnibcid@gmail.com மூலம் பகிருமாறு பொது மக்களிடம் தமிழக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.