புழல் பெண்கள் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி பெங்களூருவில் கைது

133

சென்னை, புழல் பெண்கள் சிறைச்சாலையில் இருந்து தப்பிய பெண் கைதி பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.

சென்னை, பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 32). இவர் மீது அரும்பாக்கம் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள், சூளைமேடு காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, புழல் பெண்கள் சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ஜெயந்தி 21.11.2023 அன்று முதல் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் புழல் பெண்கள் சிறைச்சாலையில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 13.12.2023 அன்று ஜெயந்தி புழல் பெண்கள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி தப்பிச் சென்ற எதிரி ஜெயந்தியை பிடிக்க புழல் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகாந்த் தலைமையில், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஜெயந்தி, பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதன்பேரில், தனிப்படையினர் பெங்களூர் விரைந்து சென்ற 2 நாட்கள் முகாமிட்டு, தீவிர விசாரணை செய்து, பெங்களூர் கோவேன்பூர் நகர் அருகிலுள்ள காட்டுக்குள் அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த எதிரி ஜெயந்தியை இன்று (16.12.2023) அதிகாலை மடக்கிப் பிடித்து, சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். சுமார் 48 மணி நேரம் பெங்களூர் பகுதியில் முகாமிட்டு, தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பிச் சென்ற பெண் கைதியை மடக்கிப்பிடித்த புழல் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகாந்த் தலைமையில், உதவி ஆய்வாளர் மணி, சிறப்பு உதவி ஆய்வாளர் பவானி, காவலர்கள் கோபால், யுவராஜ் மற்றும் பெண் காவலர் சசிகலா ஆகியோர் அடங்கிய காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.