கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய இருந்த 31 கிலோ கஞ்சா பறிமுதல்: தாம்பரம் காவல் ஆணையரகம் அதிரடி நடவடிக்கை

165

குன்றத்தூரில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற 31 கிலோ கஞ்சாவை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்தனர்.

போதையில்லா தமிழகம் என்ற முதல்வர் ஸ்டாலின் திட்டத்தின்படி தாம்பரம் காவல் ஆணையரகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை அறவே ஒழிப்பதில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் அடிக்கடி வாகன சோதனைகள் நடத்தி வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரும் ஆசாமிகளை கண்காணித்து கைது செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று 15/12/2023- அதிகாலை 5.45 மணியளவில் குன்றத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Outer Ring Road அருகே சிலர் கஞ்சா வாங்கி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது திருமுடிவாக்கம் லாரி ஷெட்டுக்கு சற்று தொலைவில் நின்றிருந்த சந்தேக நபரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பெயர் சுரேஷ் குமார், (42) செங்குன்றம், கக்கன்ஜி தெருவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவருடைய உடைமைகளை சோதனை செய்ததில் அதில் ரூ 12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள, 31 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம், அனந்தபல்லியிலுருந்து கஞ்சாவை வாங்கி வந்து குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கல்லூரி மாணவர்களுக்கும், சில்லறை விற்பனைக்கும் எடுத்துச் செல்வதாக வாக்குமூலம் அளித்தனர். தாம்பரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போதைப்பொருள் ஒழிப்பு சோதனை தொடர்ந்து நடைபெறும் என தாம்பரம் காவல் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.