தனியார் டெலிவரி நிறுவனத்தில் ரூ. 16 லட்சம் மின்பொருட்கள் திருடிய ஊழியர்கள் 2 பேர் கைது

160

சென்னை, ராயப்பேட்டை தனியார் டெலிவரி நிறுவனத்தில் ரூ. 16,76,556- மதிப்புள்ள விலையுயர்ந்த செல்போன்கள், லேப்டாப் மற்றும் டேப்களை திருடிய ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ராயப்பேட்டை, R.K. சாலை, 6வது தெருவில் instakart என்ற தனியார் டெலிவரி நிறுவனம் உள்ளது. பொதுமக்கள் ஆன்லைன் வலைதளம் மூலம் ஆர்டர் செய்யும் பொருட்களை தமிழ்நாடு முழுவதும் ஏரியா வாரியாக டெலிவரி செய்யும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர்கள் அஜித், சரவணன் மற்றும் தனசேகர் ஆகிய மூவரும் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த ரூ. 16,76,556 -மதிப்புள்ள விலையுயர்ந்த ஆப்பிள் ஐ-போன்கள், லேப்டாப் மற்றும் டேப் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை திருடி மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து மேற்படி தனியார் நிறுவனத்தின் மேலாளர் சிவசுப்பிரமணியன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ராயப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட தேனாம்பேட்டையைச் சேர்ந்த அஜித், திருவேற்காட்டைச் சேர்ந்த சரவணன் ஆகிய இருவரையும் நேற்று (14.12.2023) கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ. 2,96,500-, 1 ½ சவரன் தங்க நகைகள், ஆப்பிள் ஐ-போன் உள்ளிட்ட 5 செல்போன்கள், 1 டேப், மற்றும் 1 வாசிங்மெஷின், 1 டிவி மற்றும் 1 இருசக்கரவாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளி தனசேகர் என்பவரை காவல் குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (14.12.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.