பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்: 2 மூத்த குடிமக்களின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு
கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு புகார் மனு கொடுத்த 2 மூத்த குடிமக்களின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள துணை ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று (01.11.2023) மதியம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில், நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், பொதுமக்களிடம் இருந்து 28 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 28 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களிடமும் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கடந்த 01.10.2023 முதல் 31.10.2023 வரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து 72 புகார் மனுக்களையும், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களிடம் 105 புகார் மனுக்களையும் நேரிடையாக பெற்று சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (01.11.2023) நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், அடையாறு சாஸ்திரி நகரைச் சேர்ந்த காந்தா (70) என்பவர் தனது பெயரில் உள்ள சொத்துக்களின் பத்திரங்களை தர மறுக்கும் தனது மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், சாலிகிராமத்தைச் சேர்ந்த ரத்தினசபாபதி (வயது 80) என்பவர், தனது வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர் வாடகை தர மறுப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் ஆணையாளரிடம் மனு அளித்தனர். இவர்கள் மூத்த குடிமக்கள் புகார் மனுக்கள் மீது, அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்வின் போது மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நிஷா மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.