பங்களா வீட்டை அபகரிக்க முயன்ற சினிமா பைனான்சியர் கைது

148

சென்னையில் பல கோடி மதிப்புள்ள பங்களா வீட்டை போலி ஆவணம் மூலம் அபகரித்த சினிமா பைனான்சியரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையை சேர்ந்த பாலா மணியன், 45 என்பவருக்கு சொந்தமாக சென்னை, தி.நகர், விஜயராகவா ரோட்டில் ஒரு பங்களா வீடு உள்ளது. அதனை முகன் சந்த் போத்ரா என்பவருக்கு மாதம் ரூ. 1. 80 லட்சம் வீதம் வாடகை என ஒப்பந்தம் பேசி 2013 ம் ஆண்டு முதல் குடியிருந்து வந்துள்ளனர். ஆனால் அவர்கள் சரிவர வாடகை செலுத்ததால் வாடகை பாக்கியை வசூலிக்க கோரி பாலாமணியன் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் முகன்சந்த் போத்ரா கடந்த 2019ம் ஆண்டு இறந்து விட்டார். முகன்சந்த் போத்ராவின் மகன் ககன்சந்த் போத்ரா பங்களாவை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாலாமணியன் கையெழுத்திட்டது போன்றும், பாலாமாணிக்கு ரூ.6 கோடி கொடுத்தது போன்று போலியான குத்தகை ஒப்பந்த பத்திரம் தயார் செய்து சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து பாலாமணியன் சென்னை மத்தியகுற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கடந்த 06.12.2022 அன்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் துரிதமாக நடவடிக்கை எடுக்க கோரி
கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் செந்தில்குமாரி, அறிவுறுத்தலின் பேரில், மத்திய குற்றப்பிரிவு துணைக்கமிஷனர் நிஷா மேற்பார்வையில், ஆய்வாளர் பழவேசம் அடங்கிய) தனிப்படை காவல் குழுவினர் முக்கிய குற்றவாளியான ககன்சந்த் போத்ரா (வயது 35) என்பவரை நேற்று கைது செய்தனர்.

மேலும் போலீசாரின் விசாரணையில் குற்றவாளி ககன்சந்த் போத்ரா இதுபோன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட ககன்சந்த் போத்ரா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.