சென்னை நகரில் 6,400 கிலோ குட்கா பறிமுதல் * 380 பேர் கைது: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

156

சென்னை நகரில் கடந்த 15 நாட்கள் போலீசார் நடத்திய குட்கா வேட்டையில் 367 வழக்குகளில் 380 பேர் கைது செய்யப்பட்டு 6,400 கிலோ குட்கா பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதையில்லா தமிழகம் என்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான என்ற திட்டத்தின் பேரில் சென்னை நகரில் குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இம்மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 15 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 367 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 380 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ. 59 இலட்சம் மதிப்புள்ள 6,392 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், பணம் ரூ. 23,40,390 மற்றும் 3 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ, 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், காவல்துறையினரால் அளிக்கப்பட்ட தகவலின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 2 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். சென்னை நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துதல், விற்பனை செய்தல், பதுக்குதல் போன்வைகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.