சென்னையில் 3 இடங்களில் கஞ்சாவுடன் 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது: 28 கிலோ பறிமுதல்

153

கோயம்பேடு, கொருக்குப்பேட்டை மற்றும் கிண்டி பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் உட்பட 4 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 28.2 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/Anna Nagar) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (14.10.2023) காலை, கோயம்பேடு, காளியம்மன் தெருவில் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அங்கு சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த மேகவாணி (38), கடலூர் ராஜகுமாரி (எ) குமாரி (65) ஆகிய 2 பெண்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 22 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/Washermenpet) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (14.10.2023) காலை, கொருக்குப்பேட்டை இரயில் நிலையம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த தண்டபாணி, வ/29, த/பெ.பொன்னையா, சங்கரெட்டி கோட்டை, ஆத்தூர் தாலுக்கா, திண்டுக்கல் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/Adyar) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (14.10.2023) காலை, கிண்டி இரயில் நிலையம் அருகே கண்காணித்து, அங்கு சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த கேரளா. எர்ணாவூரைச் சேர்ந்த அக்‌ஷய்குமார் (எ) கண்ணன் (23) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி 3 வழக்குகளில் கைது செய்யப்பட்ட 4 நபர்களும், விசாரணைக்குப் பின்னர், நேற்று (14.10.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.