என்கவுன்டர் நடந்தது எப்படி: ஆவடி காவல் ஆணையரகம் விளக்கம்

171

சென்னை சோழவரத்தில் ரவுடிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆவடி காவல் ஆணையரகம் விளக்கம் அளித்துள்ளது. அது தொடர்பாக ஆவடி காவல் ஆணையரகம் தரப்பில் அளித்துள்ள விளக்கம் வருமாறு:–

‘‘கடந்த 17.08.202-ம் தேதி காலையில் செங்குன்றத்தில் பார்த்திபன் என்பவர் ரவுடிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை ஏற்பாடு செய்த முக்கிய குற்றவாளிகளான ரவுடிகள் முத்துசரவணன் மற்றும் சண்டே சதீஷ் ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர். இன்று 12.10.2023 ம்தேதி அதிகாலை சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாறம்பேடு கண்டிகையில் தலைமறைவான குற்றவாளிகள் முத்துசரவணன் மற்றும் சண்டே சதீஷ் ஆகிய இருவரும் பதுங்கி இருந்ததாக தனிபடை போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி தனிப்படை போலீசார் அங்கு சென்று ரவுடிகள் இருவரையும் கைது செய்யச் சென்றனர். அப்போது ரவுடிகள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.

போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் ரவுடி முத்துசரவணன் மற்றும் ரவுடி சண்டே சதீஷ் ஆகியோர் குண்டு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரவுடிகள் இருவரும் இறந்தனர். ரவுடிகள் சுட்டதில் காயமடைந்த மூன்று போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். முத்து சரவணன் மீது 6 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் 8 வழிப்பறி கொள்ளை வழக்குகள் உள்ளன. இவர் சென்னை புறநகர பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிம் மிரட்டி பணம் பறிப்பதும் கொலை செய்வதும் முக்கிய தொழிலாக இருந்துவந்துள்ளது. இவரது நெருங்கிய கூட்டாளியான ரவுடி சண்டே சதிஷ் என்பவர் மீது 5 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்கும், 4 வழிப்பறி கொள்ளை வழக்குகள் உள்ளன.