சோழவரத்தில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை: ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி நடவடிக்கை

178

சென்னை, செங்குன்றம் அருகே பாடியநல்லூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பார்த்திபன். கடந்த ஆகஸ்ட் மாதம்  இவர் வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடினர்.

இந்தச்  சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகியோரை ஆவடி காவல் ஆணையரக சிறப்பு தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அவர்கள் சோழவரம் அருகே மாறம்பேடு கண்டிகையில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற ரெட்ஹில்ஸ் உதவிக்கமிஷனர் ஜவகர், இன்ஸ்பெக்டர் ரமேஷ். எஸ்ஐ அசோக் மற்றும் தலைமைக்காவலர்கள் லிவி பிரபு, கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ் தலைமையிலான போலீசார் இருவரையும் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

அப்போது, தப்பியோடும் முயற்சியில் அவர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். இதில்  காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில் முத்து சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். குண்டடி பட்டு படுகாயமடைந்த  சண்டே சதீஷ், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வழியிலேயே அவரும் உயிரிழந்தார். மேலும், காயமடைந்த காவலர்கள் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தை ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் பார்வையிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியது.