திமுக எம்பி தயாநிதி மாறன் வங்கிக் கணக்கில் இருந்து 99,999 அபேஸ்: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்குப்பதிவு

134

மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன். சென்னை ஆர்ஏ புரம் போட் கிளப் ரோட்டில் வசித்து வருகிறார். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், அவர் கூறியிருந்ததாவது, ‘‘எனது மனைவி தற்போது மலேசியாவில் உள்ளார். அவரது செல்போன் எண்ணுக்கு மர்ம நபர்கள் சிலர் போன் செய்து இந்தியில் பேசினர். பின்னர் சிறிது நேரத்தில் மனைவியும் நானும் இணைந்து தொடங்கியுள்ள வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 99,999- எடுக்கப்பட்டுள்ளது. கோபாலபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் எங்களது அக்கவுண்ட் உள்ளது. அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டுத்தரவேண்டும்’’ என அந்தப் புகாரில் கூறியுள்ளார். தயாநிதி மாறன் வங்கிக் கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்தப்புகார் தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளதாவது, ‘‘தயாநிதி மாறன் செல்போனுக்கு வங்கி ஊழியர் போல பேசி பணபரிவர்த்தனை விபரங்களை கேட்டு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓடிபி வங்கிக் கணக்கு எண், ஆதார் என எந்த விபரங்களும் பகிரப்படாத நிலையிலும், அழைப்பு வந்த சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் அங்கீகரிக்கப்படாத பணபரிவர்த்தனை நடந்துள்ளது. மோசடி செய்தவர்களை கண்டுபிடிப்பதற்கும் இழந்த தொகையினை மீட்பதற்கும் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இது போன்ற ஆன்லைன் வங்கி மோசடிகளிலிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஏதேனும் புகார்கள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் 1930 என்ற எண்ணை தொடர்புகொண்டும், ஆன்லைனில் Www.cybercrime.gov.in என்ற தேசிய சைபர் கிரைம் இணையதள பக்கத்தில் புகார் அளிக்குமாறும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்’’.