நெல்லை நகரம் மற்றும் மாவட்டங்களில் கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளன: டிஜிபி அலுவலகம் விளக்கம்

154

நெல்லை நகரம் மற்றும் மாவட்டங்களில் கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பாக டிஜிபி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை விவரம்:

சமூக ஊடகங்களிலும், சில செய்தி இதழ்களிலும் தமிழ்நாட்டில் குறிப்பாக தென்மண்டத்திலுள்ள நெல்லை மாநகரம் மற்றும் நெல்லை மாவட்டத்தில் கொலை குற்றங்கள் அதிகமாகிவிட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. தென்மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2022 வரை 364 கொலை சம்பவங்கள் நடைபெற்றிருந்தன . இந்த ஆண்டில் ஆகஸ்ட் 2023 வரை 323 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எனவே சென்றஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன.நெல்லை மாநகரம் மற்றும் நெல்லை மாவட்டத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகமாகியுள்ளன என்ற தகவலும் தவறானதாகும். இவற்றிலும் சென்ற ஆண்டை காட்டிலும் குறைந்துள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 35 கொலை வழக்குகளும், 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 30 கொலை வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதே போல நெல்லை மாநகரத்தில் 2022 ஆகஸ்ட் வரை நடந்த கொலைகளின் எண்ணிக்கை 15ஆகவும், 2023 ஆகஸ்ட் வரை நடந்த கொலைகளின் எண்ணிக்கை 11ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த வகையில் பார்த்தால் நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 14 சதவீதமும், நெல்லை மாநகரத்தில் 27 சதவீதம் கொலைகளும் குறைந்துள்ளன.

குறைந்த சாதிய கொலைகள்

மேலும் இருவேறு சாதிகளுக்கிடையே நடந்த கொலைகள் நெல்லை மாவட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு 10 ஆக இருந்தது 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆக குறைந்துள்ளது. நெல்லை மாநகரத்தில் 2022 ஆகஸ்ட் மாதம் 7 ஆக இருந்த சாதிய கொலைகள் 2023 ஆகஸ்ட் வரை 4 ஆக குறைந்துள்ளது. அந்த வகையில் பார்த்தால் கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் சாதிய கொலைகள் 30 சதவீதமாகவும், 43 சதவீதமாகவும் குறைந்துள்ளன. மேலும் தென்மண்டலத்தில் இரு வேறு சமூகத்தினரிடையே நடைபெற்ற கொலை வழக்குகளைப் பொருத்தவரை சென்ற ஆண்டு 2022 ஆகஸ்ட் வரை 82 வழக்குகளும் இந்த ஆண்டில் 74 வழக்குகளும் பதிவாகி உள்ளன. எனவே சாதிரீதியான கொலை வழக்குகளும் குறைந்துள்ளன.

அது மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் தாக்கலான கொலை கொலை வழக்குகளை பொருத்தவரை, சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 1,090 வழக்குகளும் இந்த ஆண்டில் 1,052 வழக்குகளும் தாக்கலாகியுள்ளன. எனவே மாநிலம் முழுவதும் ஒப்பிட்டாலும் தொடர் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொலை வழக்குகள் குறைந்துள்ளன.

இவற்றை மேலும் கட்டுப்படுத்திட ஒவ்வொரு வாரமும் “தீவிர நடவடிக்கை” (Storming Operation) அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையாளர்கள் மேற்பார்வையில் நடத்தப்பட்டு வரப்படுகிறது. குறிப்பாக சாதி ரீதியிலோ, முன் விரோதம் காரணமாகவோ ரௌடிகளுக்கு இடையிலான மோதல் காரணமாகவோ கொலை சம்பவங்கள் நிகழா வண்ணம் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகின்றன. ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறார்கள். நீதிமன்ற விசாரணை தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) சிறப்பு அதிகாரியாக (Nodal officer) நியமிக்கப்பட்டு, முக்கிய வழக்குகளில் நீதிமன்ற விசாரணை கண்காணிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டணை பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன.

இவ்வாறு டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.