பார்ட் டைம் ஜாப் வாங்கித்தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த 5 பேர் கும்பல் கைது: சென்னை சிசிபி போலீஸ் அதிரடி
சென்னை, முகப்பேரைச் சேர்ந்த நபர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் பகுதி நேர வேலை செய்வதற்காக ஆன்லைனில் தன்னை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு பின்னர் டெலிகிராம் மூலம் மோசடி நபர் தொடர்பு கொண்டதாகவும் அதனை நம்பி அவர்கள் கொடுத்த இரண்டு வங்கி கணக்குகளுக்கு ரூ. 18 லட்சத்து 23 ஆயிரம் வரையிலான பணத்தை டெபாசிட் செய்ததாகவும் ஆனால் தான் செலுத்திய தொகை ஏதும் தனக்கு திரும்ப வரவில்லை’’ என்று தெரிவித்திருந்தார். கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
புலன் விசாரணையில் புகார்தாரர் பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன் தொடர்புடைய மொபைல் எண் விவரங்கள் முகவரிகள் மற்றும் அடையாள விவரங்கள் போன்றவைகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மோசடி வங்கி கணக்கிலிருந்து செய்யப்பட்ட பண பரிவர்த்தனைகளும் ஆய்வுக்கு உட்படுத்தபட்டன. விசாரணையில் குற்றவாளிகள் சென்னை ஐ.சி.எப்-லிருந்து இந்த குற்றத்திற்காக வங்கி கணக்குகள் தொடங்கி அதனை வெளிநாட்டில் இருக்கும் மோசடிக்காரர்களிடம் கொடுத்து மக்களை ஏமாற்றியது தெரியவந்தது.
அதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த டார்லா பிரவீன் குமார், 32, அண்ணாநகர் கிழக்கைச் சேர்ந்த ராஜு, 40, அசோக்குமார், 33, வில்லிவாக்கம் வீரராகவன், 33, பிரவீன்குமார், 31 ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். விசாரணையில் போலியாக ஒரு வங்கி கணக்கு தொடங்க முதலில் ரூ. 50,000 – பெறப்பட்டதாகவும் பிரதி மாதம் ரூ. 30,000- வரை பெறப்பட்டதாக டார்லா பிரவீன்குமார் தெரிவித்ததன்பேரில் தனக்கு உதவிய அசோக்குமார் மற்றும் ராஜீ ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அசோக்குமார் என்பவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின்பேரில் எதிரி வீரராகவன் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு போலி ஆவணங்களை வைத்து தொடங்கிய வங்கி கணக்குகளை மலேசியாவிற்கு அனுப்புவதை வாடிக்கையாக அசோக்குமார், பிரவீன்குமார் மற்றும் வீரராகவன் ஆகியோர் செய்து வந்துள்ளனர். அவ்வாறு போலியாக உருவாக்கப்பட்ட வங்கி கணக்குகள் ஆன்லைன் பகுதிநேர வேலைவாய்ப்பு மோசடிக்காக பயன்படுத்தியுள்ளனர். இக்குற்ற செயலுக்காக பயன்படுத்தப்பட்ட 7 செல்போன்கள் மற்றும் 1 லேப்டாப் ஆகியவை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. கைதான 5 பேரும் சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 11.08.2023 நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மோசடிக்காக உபயோகப்படுத்தப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் முடக்கப்பட்டது. மேலும் மேற்கண்ட எதிரிகள் ஏற்கனவே மும்பை, இஸ்லாபூர் காவல் நிலைய வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.
ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடியில் பாதிக்கப்பட்டவர் பெரும்பாலும் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலம் ஈர்க்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் டெலிகிராமில் ஒரு குரூப்பில் இணைக்கப்பட்டு யூடியூப் வீடியோக்களுக்கு லைக் செய்வது, ஓட்டல்களுக்கு ரீவியூ எழுதுவது அல்லது கிரிப்ட்டோ கரன்சியில் டிரேடு செய்வது போன்ற டாஸ்களில் ஈடுபடுகின்றனர். ஆரம்பத்தில் ரூ.150 முதல் ரூ.1000 வரை லாபம் பெறுகின்றனர். அதே உத்வேகத்தில் அவர்களை டெலிகிராமில் ஐம்பது பேர் கொண்ட குழுவில் இணைக்கப்படுகின்றார்கள்.
அதில் தொடரவும் மேலும் பணம் சம்பாதிக்கவும் Subscription Fee செலுத்த சொல்லுகின்றனர். இவ்வாறு மற்றவர்களுக்கும் லாபம் கிடைத்ததாக போலி ஸ்கீரின்சாட்களை அதே குரூப்பில் சேர் செய்கின்றனர். இதனை நம்பி புகார்தாரர்கள் பணத்தை இழக்கின்றனர். இதுவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே ஆன்லைனில் பகுதி நேர வேலை தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1930 என்ற எண்ணை அணுகுமாறும், ஆன்லைனில் www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்குமாறு பொதுமக்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கேட்டுக் கொண்டுள்ளார்.
*****