டிவி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை தாக்கி நகை கொள்ளை: 14 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டு வேலைக்காரி கைது

190

டிவி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை தாக்கி நகையை கொள்ளையடித்துச் சென்ற வீட்டு வேலைக்காரியை சென்னை வேளச்சேரி போலீசார் கைரேகையை வைத்து துப்புதுலக்கி கைது செய்தனர்.

சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்தவர் லஷ்மி. இவர் சின்னத்திரையில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக வேலை பார்த்து வந்துள்ளார். அவரது வீட்டில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வேலை செய்து வந்தார். அவர் சம்பவ தினத்தன்று திடீரென லட்சுமியிடம் வாக்குவாதம் செய்து, அவரை தாக்கிவிட்டு, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 8 சவரன் தங்கச்சங்கிலி, 4 சவரன் வளையல்கள் மற்றும் பணம் ரூ. 45 ஆயிரம் ஆகியவற்றைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இந்தச் சம்பவம் கடந்த 12.4.2014ம் ஆண்டு நடந்தது. இது குறித்து வேளச்சேரி காவல் நிலயத்தில் லட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்தும், விரல்ரேகை பிரிவினர் மூலம் கைரேகைகள் கைப்பற்றியும் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வேலைக்கார பெண்மணியின் முகாந்திரம் தெரியாத நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்த வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணைக்கமிஷனர் சிபிசக்கரவரத்தி மேற்பார்வையில் வேளச்சேரி போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

இந்நிலையில் வேளச்சேரி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர், புனித தோமையர்மலை, ஒரு விரல் கைரேகை பிரிவுக்கு மேற்படி வழக்கில் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட விரல் ரேகை பதிவுகளை, பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு அறிக்கை தருமாறு கடிதம் கொடுத்திருந்தார். விரல் ரேகை பிரிவினர் மேற்படி வழக்கில் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கைவிரல் ரேகை பதிவுகளை வைத்து, தீவிரமாக ஆராய்ந்தனர். அப்போது 11.01.2023 அன்று திருச்சி மாவட்டம், ஜீயர்புரம் காவல் நிலைய ஆதாய கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருச்சி லால்குடியைச் சேர்ந்த காந்தி, வயது 64 என்பவரின் கைரேகையுடன் ஒத்துப்போனது என வேளச்சேரி காவல் நிலையத்திற்கு அறிக்கை அனுப்பியிருந்தனர்.

அதன்பேரில், வேளச்சேரி காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், காந்தி, லஷ்மி வீட்டில் திருடிய வேலைக்கார பெண்மணி என்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி தலைமறைவாக இருந்த பெண் காந்தியை நேற்று (06.08.2023) போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட காந்தி நேற்று (06.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.