பீடி கேட்டு தகராறு: கட்டிடத் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற இருவர் கைது

174

சென்னை, புளியந்தோப்பு, கன்னிகாபுரம், 4வது தெருவைச் சேர்ந்தவர் கோபி (வயது 26). கட்டிட வேலை செய்து வந்தார். கோபி நேற்று (06.08.2023) இரவு 11.45 மணியளவில் தனது நண்பரை பார்த்து விட்டு கொடுங்கையூர், ஆர்.ஆர் நகர் மெயின் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 நபர்கள் கோபியிடம் பீடி கேட்ட போது ஏற்பட்ட வாய் தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த 2 நபர்களும் சேர்ந்து கோபியை தாக்கி கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து கொலையுண்ட கோபியின் அண்ணன் சரவணன் என்பவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 

கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட கொடுங்கையூரைச் சேர்ந்த சிவா (55), ஜான்சன் (எ) கருப்பு, 24 ஆகிய இருவரையும் இன்று (07.08.2023) கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சிவா மீது ஏற்கனவே 2 கஞ்சா வழக்குகளும், ஜான்சன் (எ) கருப்பு மீது 1 கொலை முயற்சி வழக்கு உட்பட 6 வழக்குகள் உள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (07.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.