கோயம்பேடு பகுதியில் பண மோசடி செய்த நபரை காரில் கடத்திச் சென்ற வழக்கில் புகார் கொடுத்த 7 மணி நேரத்தில் 7 நபர்களை போலீசார் கைது செய்து 2 கார்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 37. சென்னையிலுள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் வலில் சிறையில் இருந்து வந்த நிலையில், சுமார் 2 மாதங்களுக்கு முன்பு நிபந்தனை பிணையில் வெளியே வந்தார். சென்னை, கோயம்பேட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கி 15 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் நிபந்தணை பிணை கையெழுத்திட்டு வந்துள்ளார். இந்நிலையில், செந்தில்குமார் கடந்த 28.07.2023 அன்று மதியம் கோயம்பேடு, சேமாத்தம்மன் நகரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வெள்ளை நிற ஹுண்டாய் காரில் வந்த நபர்கள் செந்தில்குமாரை காரில் கடத்திச் சென்றனர். செந்தில்குமாரின் தாய் கலா என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு தனது மகனை கடத்தியுள்ளதாகவும், பணம் ரூ 15 லட்சம் தந்தால் செந்தில்குமாரை உயிருடன் விடுவிப்பதாகவும் தெரிவித்து, இணைப்பை துண்டித்துவிட்டனர்.
இதுகுறித்து கலா நேற்று (30.07.2023) இரவு கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மேற்கு மண்டல இணை ஆணையாளர் மனோகரன் அறிவுரையின்பேரில், கோயம்பேடு காவல் துணை ஆணையாளர் குமார் ஆலோசனையின்பேரில், உதவி ஆணையாளர்கள் ரமேஷ்பாபு (கோயம்பேடு), ராகவேந்திரா கே.ரவி (வில்லிவாக்கம்) தலைமையில் K-10 கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்கண்ணன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில், காவல் குழுவினர் தங்களை தேடுவதை அறிந்த கடத்தல் நபர்கள், நேற்று (30.07.2023) அன்று இரவு கடத்தப்பட்ட செந்தில்குமாரை போரூர் சுங்கச்சாவடி அருகே இறக்கிவிட்டுச் சென்றனர். அதனையடுத்து போலீசார் இந்த கடத்தலில் ஈடுபட்ட காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி செந்தில்குமாரை கடத்திச் சென்ற அம்பத்தூரைச் சேர்ந்த அஜித்குமார், 27, செல்வம், 38, மணிகண்டன், 27, சரவணன், வ/27, விக்னேஷ், 25, திருவண்ணாமலை சிவா, 31, பாலாஜி, 27 ஆகிய 7 நபர்களை இன்று (31.07.2023) காலை கைது செய்தனர். எதிரிகளிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கடத்தப்பட்ட செந்தில்குமார், மேற்படி நிதிநிறுவனத்தின் அமைந்தகரை கிளையின் மேலாளராக பணிபுரிந்து வந்ததும், எதிரிகள், செல்வம், மணிகண்டன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் செந்தில்குமாரின் வாக்கினை கேட்டு, மேற்படி நிதி நிறுவனத்தில் முறையே ரூ. 4 லட்சம், ரூ. 3 லட்சம் மற்றும் ரூ. 8 லட்சம் முதலீடு செய்துள்ளனர். பின்னர் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின்பேரில், பொருளாதார குற்றப்பிரிவில் (EOW) வழக்குப் பதிவு செய்து, மேற்படி நிதி நிறுவனத்தின் அமைந்தகரை கிளையின் மேலாளராக பணிபுரிந்த செந்தில்குமாரை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
இந்நிலையில் செந்தில்குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன் சிறையிலிருந்து நிபந்தணை பிணையில் வெளியே வந்ததும், இதனால் ஏமாற்றமடைந்த செல்வம், மணிகண்டன் மற்று விக்னேஷ் ஆகியோர் மற்ற 4 எதிரிகளுடன் சேர்ந்து, எதிரி அஜித்குமாரின் வெள்ளை நிற ஹுண்டாய் காரில் கடத்திச் செல்ல மற்ற நபர்கள் ஆட்டோவில் பின் தொடர்ந்து சென்றதும், பின்னர் செந்தில்குமாரை மற்றொரு காருக்கு மாற்றி கடத்திச் சென்று, செந்தில்குமாரின் தாயாரிடம் தாங்கள் முதலீடு செய்த பணம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 7 நபர்களும் விசாரணைக்கு பின்னர் இன்று (31.07.2023) நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட உள்ளனர். மேற்படி வழக்கில் துரிதமாக செயல்பட்டு, கடத்தல் வழக்கின் எதிரிகளை புகார் கொடுத்த 7 மணி நேரத்தில் கைது செய்த, மேற்படி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.