2 ஆண்டுகளில் 67,999 பேர் கண்டுகளிப்பு: தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டவரையும் கவர்ந்திழுக்கும் சென்னை போலீஸ் மியூசியம்

229

சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் மியூசியத்தை கடந்த 2 ஆண்டுகளில் 67,999 பேர் நேரில் சென்று பார்த்து ரசித்துள்ளனர். அந்த வகையில் சென்னை போலீஸ் மியூசியம் தமிழக மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டவரை கவர்ந்திழுக்கும் அம்சமாக மாறியுள்ளது.

2021ம் ஆண்டு 30,285 பார்வையாளர்கள்

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு போலீஸ் மியூசியம் 28.9.2021 அன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார். ரூ. 6 கோடியே 47 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட இந்த போலீஸ் மியூசியத்தை பார்வையிட வரும் அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இது திறந்து வைக்கப்பட்ட 2021ம் ஆண்டு முதல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காவல் உயர் அதிகாரிகள், வெளிநாட்டவர்கள், பல்வேறு திரைத்துறையுனர் மற்றும் தமிழக காவல் துறை, நீதித்துறை, ஆட்சிப்பணி உயர் அதிகாரிகள், காவல் சிறார் மன்ற மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பட்ட பார்வையாளர்கள் என மொத்தம் 30,285 பார்வையாளர்கள் காவல் அருங்காட்சியகத்திற்கு நேரில் வருகை புரிந்து பார்வையிட்டுள்ளனர்.

வாரந்தோறும் மோப்பநாய் கண்காட்சி

பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் காவல் வாத்தியக்குழுவின் இசை நிகழ்ச்சி, காவல் மோப்ப நாய் கண்காட்சி, காவல் குதிரை கண்காட்சி, சிலம்பம், மைம் கூத்து, பொம்மலாட்டம், வினாடி வினா நிகழ்ச்சி, தோட்டக் கலை பயிற்சி, மரபு நடை நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம், தற்கொலை தடுப்பு, மாசு கட்டுப்பாடு போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

எண்ணிலடங்கா அருங்காட்சிப் பொருட்கள்

போலீஸ் மியூசியத்தில் ஏராளமான கலைப்பொருட்கள், அந்த காலத்து- போலீஸ் படையினர் பயன்படுத்திய வாகனங்கள் (சீமை வண்டிகள் முதல் விரைவுப் படகுகள் வரை), 1900ம் ஆண்டுகளில் இருந்து ஒரு ரகசிய ஆவண நகலெடுக்கும் கருவி, விசாரணைக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள், வாத்திய இசைக் கருவிகள், காவல் துறையின் சாதனைகள், காவல் துறையால் மீட்டெடுக்கப்பட்ட சிலைகள், கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வெடிகுண்டுகள், குண்டுகளைக் கண்டெடுக்க உதவும் கருவிகள், மாதிரி சிறைச்சாலை, சடங்கு வாள்கள், போர் பம்ப் அதிரடி துப்பாக்கி , ஏகே 47 உள்ளிட்ட ரகரகமான துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள், தடயவியல் கருவிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாநில காவல்துறையின் முக்கிய வழக்குகள் பற்றிய விளக்க சுவர் பேனல்கள், காலங்காலமாக படை பற்றிய கதைகள், தூண்டும் புகைப்படங்கள், உருவப்படங்கள் (முதல் பெண் சப் -இன்ஸ்பெக்டர் உஷா ராணியின் உருவம்) மற்றும் காட்சி பலகைகள்; பல்வேறு போலீஸ் பிரிவுகளின் சீருடை அணிந்த மேனிக்வின்கள், மீட்கப்பட்ட கொள்ளை சிலைப் பிரிவு, கோயம்புத்தூரில் உள்ள பாழடைந்த தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட செல் பிரிவு, புகைப்படக் கூடம், பிரமாண்டமான கதவுகள், ஆழமான மற்றும் நன்கு வெளிச்சம் கொண்ட வராண்டாக்கள், அலங்கரிக்கப்பட்ட கமிஷனர் அலுவலக அறை ஆர்ட் டெகோ காலத்தின் ஒரு மை, ஒரு ரோல்-டாப் டேபிள், ஒரு மண்ணெண்ணெய் மின்விசிறி, கிராமபோன் என எண்ணற்ற அருங்காட்சிகள் இந்த போலீஸ் மியூசியத்தில் காட்சியமைக்கப்பட்டுள்ளன.

கணிசமாக உயர்ந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை

மியூசியத்தை கண்டு களிக்க வருவோரின் எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு 30,285 ஆக இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு 37,714 ஆக உயர்ந்துள்ளது. வார விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு ஒரு நாளைக்கு 120 பார்வையாளர்கள் போலீஸ் மியூசியத்துக்கு வருகை தந்து கண்டு களிப்பதாக மியூசியம் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். சென்னை வாசிகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வரும் பயணிகள் எழும்பூரில் உள்ள போலீஸ் மியூசியத்தை காணாமல் செல்வதில்லை.

கூடுதல் டிஜிபி அமல்ராஜின் கலை நயம்

சென்னை எழும்பூரில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை சீரமைத்து உருவாக்கப்பட்ட இந்த போலீஸ் மியூசியத்தை 2021ம் ஆண்டு சென்னை நகர போலீஸ் தலைமையிட கூடுதல் கமிஷனராக இருந்த அமல்ராஜ், ஐபிஎஸ் (தற்போது தாம்பரம் போலீஸ் கமிஷனர்) தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து கலைநயத்துடன் செதுக்கியுள்ளார். அப்போதைய தமிழ்நாடு டிஜிபி திரிபாதி மற்றும் அதனையடுத்து வந்த டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் கட்டிடத்தை இத்தனை கலைநயத்துடன் புகழடையும் அளவுக்கு கொண்டு வந்த பெருமை கூடுதல் டிஜிபி அமல்ராஜை சாரும். இத்தனை புகழ்வாய்ந்த போலீஸ் மியூசியம் உருவாக சென்னை நகர காவல்துறைக்கு INDeco குரூப் ஆஃப் ஹோட்டல்களின் நிர்வாகி ஸ்டீவ் போர்கியா, ரீச் பவுண்டேஷன் மற்றும் கன்சர்வேஷன் மெயின்ஸ்ட்ரீம் மற்றும் தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷன் ஆகியவையும் முக்கிய காரணிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

– AMEER HAMZA