சென்னை ராயப்பேட்டையில் 58 செல்போன்கள் பறிமுதல் 2 பேர் கைது

173

சென்னை ராயப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 58 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை, கோபாலபுரம், அவ்வைசண்முகம் சாலையில் வசித்து வருபவர் சித்தார்த், 20. கடந்த 20.08.2023 அன்று காலை 9.30 மணியளவில் தனது வீட்டிலிருந்த போது, அடையாளம் தெரியாத 2 நபர்கள் மேற்படி சித்தார்த் வீட்டில் நுழைந்து 2 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பியுள்ளனர். இது குறித்து சித்தார்த் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. ராயப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர், மேலும் சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்தனர்.

அதனையடுத்து செல்போன் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை, மயிலாப்பூர் மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்த விஷால், 21, திருவல்லிக்கேணி விக்கி, 19 ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் சேர்ந்து சென்னை ராயப்பேட்டை, மைலாப்பூர் மற்றும் அபிராமபுரம் பகுதிகளில் உள்ள வீடுகளில் நுழைந்து செல்போன்களை திருடி பாரீஸ் பகுதியில் உள்ள 2 கடைகளில் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து புகார்தாரரின் 2 செல்போன்கள் மற்றும் விற்பனை செய்த 2 கடைகளிலிருந்து 56 செல்போன்கள் என மொத்தம் 58 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட விஷால் மீது ஏற்கனவே 1 பாலியல் பலாத்காரம் வழக்கும், விக்கி மீது வீடு புகுந்த திருடிய குற்றத்திற்காக 1 வழக்கும் உள்ளது தெரியவந்தது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (22.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.