சென்னையில் விதியை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக 554 வழக்குகள் பதிவு

152

சென்னை நகரில் உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக காவல்துறையில் 554 வழக்குகள் உட்பட மொத்தம் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற ஆணையின்பேரில், தமிழக அரசின் வழகாட்டுதல்கள்பேரில், தீபாவளியை முன்னிட்டு, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரங்கள் மட்டும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடந்த 11.11.2023 முதல் இன்று (13.11.2023) காலை வரை கனம் உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 554 வழக்குகளும், தமிழக அரசின் விதிகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 8 வழக்குகளும், அளவுக்கு அதிகமான சத்தத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 19 வழக்குகளும் என மொத்தம் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.