தாம்பரம் மாநகர காவல் எல்லைகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தை அறவே ஒழிப்பதில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அதன்படி வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கடும் நடவடிக்கை எடுக்கும்படி அமல்ராஜ் உத்தரவின் பேரில் தாம்பரம் மதுவிலக்கு பிரிவு உதவி ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினர் கண்காணித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து 6.-01.-2024ஆம் தேதி காலை 11 மணியளவில் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊரப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே சிலர் கஞ்சா வாங்கி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பேருத்து நிறுத்தத்தில் நின்றிருந்த இரு சந்தேக நபர்களை விசாரணை செய்ததில் ஒருவர் திருப்பதியைச் சேர்ந்த ரவிக்குமார் (27) மற்றொருவர் முரளி (26) என்றும் தெரியவந்தது.
அவர்களது உடைமைகளை சோதனை செய்ததில் அதற்குள் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள, 52 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்திலிருந்து வாங்கி வந்து தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும், கல்லூரி மாணவர்களுக்கும் சில்லறை விற்பனைக்கு எடுத்துச் செல்வதாக வாக்குமூலம் அளித்தனர். இது தொடர்பாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.