487 கிலோ குட்கா பறிமுதல்: 33 நபர்களுக்கு காப்பு: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை

168

சென்னை நகரில் கடந்த 7 நாட்களில் குட்கா தொடர்பாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 33 நபர்கள் கைது செய்யப்பட்டு 487 கிலோ குட்கா மற்றும் 2.75 கிலோ மாவா பறிமுதல் செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP – Drive Against Banned Tobacco Products) என்ற சிறப்பு சோதனை மேற்கொண்டு, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 13.08.2023 முதல் 19.08.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 487 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள், 2.75 கிலோ மாவா, ரொக்கம் ரூ 5 ஆயிரம், 3 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.