விஜயகாந்த்தின் மைத்துனரிடம் ரூ.43 கோடி பண மோசடி: தனியார் கட்டுமான உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது

153

விஜயகாந்த்தின் மைத்துனரிடம் ரூ.43 கோடி பண மோசடி செய்ததாக தனியார் கட்டுமான உரிமையாளர் மற்றும் மேலாளரை சென்னை மத்திய குற்றப்பிரிவு கைது செய்தனர்.

தேமுதிக நிர்வாகியும், விஜயகாந்த்தின் மைத்துனருமான சுதீஷின் மனைவி பூர்ணஜோதி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ”எனக்கும், எனது கணவருக்கும் சொந்தமாக சென்னை மாதவரம் மெயின் ரோடு 200 அடி சாலையில் சுமார் 2.10 ஏக்கர் காலியிடம் உள்ளது. அதில் அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனை செய்வதற்காக சென்னையை சேர்ந்த சந்தோஷ் சர்மா என்பவரின் M/s.Lokaa developer Private Limited என்ற நிறுவனத்துடன் கடந்த 2014-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்தேோம். அதன்படி மொத்தம் 234 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி அதில் 78 வீடுகளை நில உரிமையாளரான எனக்கும். 156 வீடுகளை மேற்படி நிறுவனத்திற்கும். ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் எனக்கு ஒதுக்கிய 78 வீடுகளில் 48 வீடுகளை எனக்கு தெரியாமல், எனது கையெழுத்தை போலியாக போட்டு மேற்படி நிறுவனம் வெளியாட்களுக்கு விற்பனை செய்து விட்டனர். அதன் மூலம் சுமார் ரூ.43 கோடி பண மோசடி செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிறுவனத்தை சேர்ந்த சந்தோஷ் சர்மா, சாகர் மற்றும் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் கூறியிருந்தார்.

அதன் பேரில் சென்னை சென்னை மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவில் (EDF-II) வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் காவல் ஆணையாளர் செந்தில்குமாரி அவர்களது அறிவுரையின் பேரிலும், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் நிஷா நேரடியான மேற்பார்வையில், நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவு (EDF-II) காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தேடி வந்த நிலையில் நேற்று (21.02.2024) இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சந்தோஷ் சர்மா ஆ/வ.44 (கட்டுமான நிறுவன உரிமையாளர்)  மற்றும் சாகர் ஆ/வ.33 (கட்டுமான நிறுவன மேலாளர்) இருவரை கைது செய்து, நேற்று (21.02.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விசாரணையில் எதிரி சந்தோஷ் சர்மா ஒரே வீட்டை பலருக்கு விற்று பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி செய்ததாக ஏற்கனவே,சென்னை மத்திய குற்றப்பிரிவில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.