ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி சுமார் 300 நபர்களிடம் சுமார் ரூ.15 கோடி பெற்று ஏமாற்றிய 4 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு பேோலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மணலி கீழ்கண்டை வீதி பெரியதோப்பு கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘கடந்த 2022ம் ஆண்டு சென்னை ஈக்காட்டுதாங்கலில் (i) அன்னை கேப்பிட்டல் சொலிசன்ஸ், அன்னை இன்போசாப்ட் சொலிசன்ஸ், அன்னை அகாடமி பிரைவேட் லிமிடேட் மற்றும் தமிழ் அன்னை ஹாலிடஸ் லிமிடேட் ஆகிய பெயர்களில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடந்து வந்தது. அதனை நடத்தி வந்த தினேஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து மேற்படி அவர்களது ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகலாபம் தருவதாக விளம்பரம் செய்து ஆசை வார்த்தைகள் கூறினர். என்னிடமும், என்னைப் போல பல நபர்களிடம் இருந்து சுமார் ரூ.88,10,000 வரை முதலீடாக பணத்தை பெற்றுக் கொண்டு சொன்னபடி லாப பணம் கொடுக்காமலும் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்காமலும் ஏமாற்றி வருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.
அதன்பேரில், இப்புகார் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவில் (EDF-1) வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நம்பிக்கை ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் புலன் விசாரணையில், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அன்னை கேப்பிட்டல் சொலிசன்ஸ், அன்னை இன்போசாப்ட் சொலிசன்ஸ், அன்னை அகாடமி பிரைவேட் லிமிடேட் மற்றும் தமிழ் அன்னை ஹாலிடஸ் லிமிடேட் ஆகிய பெயரில் நிறுவனத்தை நடத்தி வந்த மேற்படி நபர்கள், வாடிக்கையாளர்களிடம் ரூ.1,00,000 முதலீடு செய்தால் அந்த பணத்தை Online-ல் Trading செய்து மாதம் ரூ.17,100/- வீதம் 12 மாதங்கள் லாப பணமாக கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சுமார் 300 நபர்களிடம் இருந்து ரூ.15 கோடிக்கு மேல் பணத்தை பெற்றுக் கொண்டு, லாப பணத்தை, தராமலும் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காலும் ஏமாற்றி வந்தது தெரியவந்தது.
இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், மத்தியக் குற்றபிரிவு, கூடுதல் காவல் ஆணையாளர் P.K.செந்தில்குமாரி மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் N.S. நிஷா கண்காணிப்பில், மத்திய குற்றப்பிரிவு- 2, கூடுதல் காவல் துணை ஆணையாளர் முத்துவேல் பாண்டி கண்காணிப்பில், மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவணங்கள்மோசடி பிரிவு (EDF-1) காவல் உதவி ஆணையாளர் ஜான் விக்டர் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த தினேஷ் குமார் (37), மடிப்பாக்கம் பிரேம் கிருபால் (38), கேளம்பாக்கம் திலீப் குமார் (41) சேலையூர் அருண் குமார் (40) ஆகியோரை 21.02.2024 ம் தேதி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பொதுமக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என சென்னை பெருநகர தாவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.