சென்னை, தரமணி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் சூர்யா, (வயது 25). என்பவர் கடந்த 02.08.2023 அன்று இரவு அவரது ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு மறுநாள் (03.08.2023) காலை பார்த்தபோது, காணாமல் போயிருந்தது. இது குறித்து சூர்யா, தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தரமணி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தனர். அதனையடுத்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற தரமணி ஜீவா (எ) குப்பை, (21), கள்ளக்குறிச்சி சிவா (22), விஸ்வா (எ) பாய், 20 ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். விசாரணையில் ஜீவா (எ) குப்பை, சிவா மற்றும் விஸ்வா ஆகியோர், தரமணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 5 இருசக்கர வாகனங்கள் திருடியது தெரியவந்தது. அதன்பேரில், எதிரிகளிடமிருந்து புகார்தாரரின் இருசக்கர வாகனம் உட்பட 5 திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.