2024 காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி: ஏடிஜிபி அமல்ராஜ் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார்
தமிழக காவல்துறையில் நடந்த 2024ம் ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி அமல்ராஜ் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார்.
தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கான 2024-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி சென்னையில் நடந்தது. கடந்த 15.07.2024 முதல் 07.08.2024 வரை நான்கு காவல் மண்டலங்களில் இந்த போட்டி நடத்தப்பட்டன. தகுதிச் சுற்றில் மொத்தம் 207 காவல் அதிகாரிகள் பங்கேற்றதில் 63 அதிகாரிகள் இறுதிப் போட்டிகளுக்கு மூன்று பிரிவாக தேர்வு செய்யப்பட்டனர். இறுதிப் போட்டிகள் கடந்த 19ம் தேதியும் நேற்றும் சென்னையில் உள்ள மருதம் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சிப் பள்ளியின் துப்பாக்கி சுடும் தளத்தில் நடந்தது.
19ம் தேதியன்று எஸ்பி, டிஎஸ்பி, ஏடிஎஸ்பிக்களுக்கான இறுதிப் போட்டிகளில் மொத்தம் 25 காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிஸ்டல், ரிவால்வர் மற்றும் இன்சாஸ் ஆகிய துப்பாக்கி வகைகள் இந்த போட்டியில் நடத்தப்பட்டன. இவ்விரண்டு பிரிவுகளிலும், பாதுகாப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையில் பணிபுரியும் டிஎஸ்பி துரைப்பாண்டியன், கார்த்திக் ஆகியோர் முறையே முதலாம் (தங்கம்) மற்றும் இரண்டாம் (வெள்ளி) இடத்தைப் பிடித்தனர். இதே பிரிவின் உள் வட்ட பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் டிஎஸ்பி பிரசன்னா மூன்றாம் (வெண்கலம்) இடத்தைப் பிடித்தார். மேலும், 21.09.2024-ம் நாளன்று, முதற்கட்டமாக ஏஎஸ்பி முதல் எஸ்பிக்கள் வரையிலான அதிகாரிகளுக்கு இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 12 அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களுள், தேனி மாவட்ட ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமணிய பாலச்சந்திரன் முதலிடத்தையும் (தங்கம்), திருப்பூர் மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா இரண்டாம் (வெள்ளி) இடத்தையும் மற்றும் ஈரோடு எஸ்பி ஜவகர் மூன்றாம் (வெண்கலம்) இடத்தையும் பெற்றனர்.

அதே நாளில், இரண்டாம் கட்டமாக டிஐஜி முதல் ஏடிஜிபி வரையிலான அதிகாரிகளுக்கு இறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில் 10 அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களில் ஏடிஜிபி அமல்ராஜ் முதல் (தங்கம்) இடத்தையும், ஐஜி அன்பு இரண்டாம் (வெள்ளி) இடத்தையும் மற்றும் ஐஜி சுதாகர் மூன்றாம் (வெண்கலம்) இடத்தையும் பெற்றனர். மேலும், துப்பாக்கி சுடும் போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஏடிஜிபி அமல்ராஜ் தட்டிச்சென்றார். வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சங்கர் ஜிவால் வழங்கி கவுரவித்தார்.