1,776 கர்நாடக மது பாக்கெட்டுக்கள் பறிமுதல்: அமலாக்கப்பணியக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை
பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட 1,776 மது பாக்கெட்டுக்களை தமிழக அமலாக்கப்பணியக குற்றப்புலனாய்வுப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூருவில் இருந்து பேரணாம்பட்டுக்கு மது பானங்கள் கடத்தி வருவதாக தமிழக அமலாக்கப்பணியக குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு ரகசிய தகவல் வந்தது. கூடுதல் டிஜிபி அமல்ராஜ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தரி தலைமையில் தமிழக ஆந்திர எல்லையான பேரணாம்பேட்டு வி. கோட்டா கூட் ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டதில் காரின் சீட்டுகளுக்கு அடியில் அட்டைப்பெட்டிக்குள் கர்நாடகா மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. காரை ஓட்டி வந்தவர் பேரணாம்பேட்டு தரைக்காடு பகுதியைச் சேர்ந்த பயாஸ் அகமது (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதே பகுதி நாயக்கனேரியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவருக்கு மது பாக்கெட்டுக்களை வாங்கி வந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
அதனையடுத்து காரில் 21 அட்டைப்பெட்டிகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 180 மிலி அளவு கொண்ட 1,008 மது பாக்கெட்டுக்கள், 90 மிலி அளவு கொண்ட 768 மது பாக்கெட்டுக்கள், என மொத்தம் 1,776 மது பாக்கெட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பயாசை கைது செய்த போலீசார் விசாரணைக்குப் பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான சந்தோஷ் குமாரை தேடி வருகின்றனர்.வாகன சோதனையில் மது பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் சுந்தரி உள்ளிட்ட தனிக்குழுவினரை கூடுதல் டிஜிபி அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.