1,755 லிட்டர் கோவா போலி மதுபாட்டில்கள் பறிமுதல்: தமிழக அமலாக்கப் புலனாய்வு பிரிவு அதிரடி நடவடிக்கை
கோவையில் தமிழக அமலாக்கப்பிரிவு புலனய்வுத்துறை நடத்திய வாகன சோதனையின் போது கோவாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,755 லிட்டர் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாடு அமலாக்கப்பிரிவு புலனாய்வுத்துறை மாநிலம் முழுவதும் போதை பழக்கத்தை கட்டுப்படுத்த டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் டிஜிபி அமல்ராஜ் நேரடி மேற்பார்வையில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தை மிகவும் உறுதியாக அமல்படுத்தி வருகிறது. போலி மதுபானம் தயாரிப்பு கூடங்கள், சட்ட விரோதமாக மதுபானங்கள் தயாரிக்கும் ஆலைகள், போலி மதுபான வர்த்தகம் பிற மாநில மதுபானங்கள் கடத்தல்களை தடுக்க தொடர் கண்காணிப்பு மற்றும் வேட்டைகள் நடத்தி வருகிறது. சமீபத்தில் சென்னையில் இரண்டு போலி மதுபான ஆலைகள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் கோவை சிஐயூ (CIU) ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் திருப்பூர், செடப்பாளையம் சந்திப்பிற்கு அருகில், பல்லடம் – மங்கலம் சாலையில் பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். உள்ளே 2,340 போலி கோவா மதுபான பாட்டில்கள் (மொத்தம் 1,755 லிட்டர்) கைப்பற்றினர். மேலும் அதனை வழிக்காவல் செய்த டாடா இன்டிகா காரும் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் போலி மதுபானங்கள் கோவாவில் கிருஷ்ணகிரி, சேலம் வழியாக கடத்தப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இந்த கடத்தலின் முக்கிய மூளையாக செயல்பட்ட நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மதுபானத்தை கடத்த உதவிய லாரி டிரைவர் மற்றும் டாடா இன்டிகா காரில் வந்த இருவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொது மக்கள் சட்டவிரோத மதுபான வர்த்தக தொடர்பான தகவல்களை இலவச தொலைபேசி எண். 10581 அல்லது CUG எண்.9498410581 என்ற எண்ணிற்கு தகவல் வழங்கலாம். வழங்கப்படும் அனைத்து தகவல்களும் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என அமலாக்கப்பணியக புலனாய்வுப்பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.