புலித்தோல் பார்சல் வந்ததாக டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் ரூ. 4.67 கோடி மோசடி செய்த 15 பேர் கைது: * சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை
புலித்தோல் பார்சல் வந்ததாக மிரட்டி மும்பை போலீஸ் போல நடித்து ரூ. 4.67 கோடி அபேஸ் செய்த 15 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் கைது செய்து ரூ. 52.68 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவரிடம் மர்ம நபர்கள் தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் மும்பை போலீஸ் போல செல்போன் மூலம் பேசியுள்ளனர். அந்த பெண் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக மிரட்டி ரூ. 4.67 கோடி மோசடி செய்துள்ளனர். மும்பை போலீஸ் அதிகாரிகள் போல் பேசிய அவர்கள் அந்தப் பெண்ணின் பெயரில் போதைப் பொருட்கள், போலி பாஸ்போர்ட்டுகள், ஏடிஎம் கார்டுகள், புலித்தோல் கொண்ட பார்சல் அனுப்பப் பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணைக்கு 2மணி நேரத்தில் மும்பை போலீசில் ஆஜராக வேண்டும் எனவும் மிரட்டியுள்ளனர். அதை உண்மை என்று நம்பிய அந்தப் பெண் அந்த நபர்களிடம் வீடியோகால் மூலம் பேசிய போது அவர்கள் வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பச் சொல்லி கேட்டுள்ளனர். அதன்பேரில் அந்தப் பெண்ணும் தன்னுடைய வங்கி கணக்கு பற்றிய விபரங்களை கொடுத்துள்ளார்.
அதனையடுத்து அந்த ஆசாமிகள் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்து பல மாநிலங்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பும்படி தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணும் தனது நிரந்தர வைப்புத் தொகையினை சந்தேக நபர்கள் கொடுத்த வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ. 4.67 கோடி அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற பின்னர் சந்தோக நபர்கள் செல்போன் தொடர்புகளை துண்டித்துவிட்டனர்.
இது தொடர்பாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருணிடம் பாதிப்படைந்த பெண் புகார் அளித்தார். கமிஷனர் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் சென்னை மத்திய குற்ற பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து பெண்ணிடம் மும்பை போலீஸ் போல நடித்து பணத்தை அபேஸ் செய்த 15 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். மும்பையில் உள்ள குற்றவகளிகளின் வீட்டில் இருந்து ஹவாலா பணம் ரூ. 52,68,000 மற்றும் ழக்கு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட எதிரிகள் அனைவரும் கனம் 11வது பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர். சைதாப்பேட்டை அவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள். எதிரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ. 52,68,000- பாதிக்கப்பட்ட நபரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எந்தவொரு மாநில காவல் துறையோ, CBI, TRAI போன்ற அரசு துறை சார்ந்த அதிகாரிகளோ இதுபோன்று ஸ்கைப், வாடஸ்ஆப், சிக்னல் போன்ற செயலிகள் மூலம் அழைத்து டிஜிட்டல் கைது செய்து விசாரணை செய்வதில்லை என்றும் பொது மக்கள் அதை உண்மை என்று நம்பி அடையாளம் தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்ப ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று கமிஷனர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இத்தகைய சைபர் குற்றங்கள் மூலமாக ஏதேனும் பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் வலைதள https://cybercrime.gov.in-ல் புகார் தெரிவிக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.