ஆவடி காவல் ஆணையரகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தில் (TNHB) அமைந்துள்ள குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், மாவா, கூல்லிப், குட்கா போன்ற போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கமிஷனர் சங்கருக்கு ரகசிய தகவல் வந்தது.
அவரது உத்தரவின் பேரில் இணைக்கமிஷனர் விஜயகுமார், ஆவடி துணைக்கமிஷனர் அய்மன் ஜமால் மேற்பார்வையில் ஆவடி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஆவடி மாநகராட்சி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி வெங்கடேசனுடன் போலீசார் சம்பந்தப்பட்ட குடோனுக்குள் புகுந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது குடோனுக்குள் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், மாவா, கூல்லிப், குட்கா போன்ற சுமார் 150 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அங்கு பதுக்கி வைத்த சோமசுந்தர கணேஷ் (53), இருளாண்டி (37), மகேந்திர குமார் (38) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் வைத்திருந்த குடோனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் மூடி சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.