டீத்தூள் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தல் 15.8 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல்

193

டீ பாக்கெட்டுக்களுக்குள் மெத்தம்பெடமைன் போதைப்பொருளை பதுக்கிக் கடத்திய பெண் உள்பட 8 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15.8 கிலோ மெத்தம்பெடமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சென்னை மண்டல அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று நடத்திய அதிரடி சோதனையில் 4.8 கிலோ மெத்தம்பெடமைனுடன் பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மணிப்பூரில் இருந்து சென்னை வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் ரகசியமாக நடப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி. அதனையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் உத்தரவின் பேரில் அது தொடர்பாக விசாரணை நடத்த சென்னை மற்றும் பெங்களூரு மண்டல அதிகாரிகள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இதில் மணிப்பூரில் மோரே என்ற இடத்தில் போதைப்பொருள் காரில் வைத்து கடத்தப்படுவது தெரியவந்தது. அதனையடுத்து தனிப்படையினர் மணிப்பூரின் தலைநகரான இம்பாலுக்கு சென்று அங்கு 3 நாட்கள் முகாமிட்டு அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர். கடந்த 28.12.23 அன்று ஒரு ஹோட்டலுக்கு அருகில் மணிப்பூரில் உள்ள மோரே நகரில் கடத்தல் நபர்கள் வந்த காரை தனிப்படையினர் வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது காரில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 11 கிலோ மெத்தம்பெட்டமைனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் வந்த 4 நபர்களை கைது செய்தனர்.

அதனையடுத்து இம்பாலில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரின் உதவியுடன் சென்னை மண்டல அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து போதை ஆசாமிகள் ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்யும் நபரிடம் இருந்து ரூ. 10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்தனர். மேலும் மியான்மரில் உள்ள தமு என்ற இடத்தில் இருந்து தேநீர் பாக்கெட்டுகளில் மறைத்து மோரேக்கு மெத்தமபெடமைன் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. மோரேயில் இருந்து, இம்பால் கவுகாத்தி சென்னை வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவது விசாரணையில் தெரியவந்தது.

சென்னை மண்டல போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி ரெய்டில் மொத்தம் 15.8 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக பெண் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மாருதி ஆல்டோ கார், ரொக்கம் ரூ.- 10 லட்சம் மற்றும் போதை ஆசாமிகள் தொடர்பான ரூ. 78 லட்சம் ரொக்கம் உள்ள வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.