வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்தது யார்: புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது
புதுக்கோட்டை, மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதனையடுத்து அவர்கள் காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது பார்த்தனர்.
அப்போது தொட்டிக்குள் மலக் கழிவுகள் மிதப்பதாக கூறியுள்ளனர். கடந்த 26.12.2022 அன்று நடந்த இ ந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வெள்ளானூர் போலீசார் PS 277, 328 IPC மற்றும் 3(1)(b), 3(1)(x), 3(2)(v a) SC/ST (POA) Act 1989 ஆ கிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். குற்றத்தின் தீவிரம் மற்றும் உணர்திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கு டிஜிபி உத்தரவின் பேரில் 14.01.2023 அன்று சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி புலனாய்வு அதிகாரியாக நியமித்து, புதுக்கோட்டை குற்ற எண்.01/2023 -ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 397 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளது. சாட்சிகளை விசாரித்ததைத் தவிர, சுமார் 196 மொபைல் எண்கள் மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை உள்ளடக்கிய 87 டவர் தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. வேங்கைவயல், எறையூர் கிராம மக்களிடம் இதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டது. இது தவிர, கிராம மக்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு விரிவான டி.என்.ஏ பகுப்பாய்வு செய்யப்பட்டது. மலம் கலந்த மாசுபட்ட நீரை குடித்ததால் சிகிச்சை பெற்ற குழந்தைகள் பாதிக்கப் படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 02.10.2022 அன்று வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா கணவர் முத்தையா கிராம சபைக் கூட்டத்தின் போது, வேங்கைவயல் காவலர் முரளி ராஜாவின் தகப்பனார் ஜீவானந்தம் என்பவரை அவமானப் படுத்தியது விசாரணையின் போது தெரியவந்தது. மேலும் இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளி ராஜாவால் இச்செயல் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது தெரியவந்தது.
அதனையடுத்து முரளிராஜா, சுதர்சன், முத்தையா, முத்து கிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அழிக்கப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் மீட்கப்பட்டன, இது நடந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியது. புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்யப்பட்டன.
புலன் விசாரணை முடிக்கப்பட்டு வேங்கைவயலைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்ஷன், முத்துகிருஷ்ணன் ஆகியோரின் மீது பட்டியல் சாதியினர்/பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) 1989ன் கீழ் வழக்குகளை விசாரணை செய்யும் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில், 20.01.2025 அன்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.