சென்னை அண்ணாசாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் 09.11.2024 அன்று மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த எஸ்தர் (எ) மீனா (28) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 5 கிராம் மெத்தம் பெட்டமைன் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட எஸ்தர் (எ) மீனா அளித்த தகவலின் பேரில், இவருக்கு மெத்தம்பெட்டமைன் சப்ளை செய்த சென்னை, சூளை, காளத்தியப்பா தெருவைச் சேர்ந்த பதிஜா பவன் (எ) ஜேம்ஸ் (29), கர்நாடகா குடகு மாவட்டத்தைச் சேர்ந்த டோசன் ஜோசப் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 19 கிராம் மெத்தம்பெட்டமைன், 99 கிராம் மலனா கஞ்சா பேஸ்ட் மற்றும் கிரீம், 95 மில்லி கஞ்சா ஆயில், 21 கிராம் OG கஞ்சா மற்றும் 12 MDMA மாத்திரைகள், ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் உள்ள மத்திய உயிர் வேதியியல் ஆய்வுக் கூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
மேலும் விசாரணையில் பதிஜா பவன் (எ) ஜேம்ஸ் பெங்களூரில் உள்ள நைஜீரியன் ஒருவரிடம் மெத்தம்பெட்டமைன் மற்றும் போதை மாத்திரைகளை தனது நண்பரான டோசன் ஜோசப் மூலம் வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் வெகுவாக பாரட்டினார்கள். மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில் இந்த நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் அடிப்படையில் பொதுமக்கள் போதைப்பொருட்களை கடத்தும், பயன்படுத்தும் மற்றும் விற்பனை செய்யும் நபர்களை பற்றி தகவல் தெரிந்தால் 78710 78100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும்.