ரூ. 65 லட்சம் சொத்தினை போலி ஆவணம் மூலம் ஆட்டையயைப் போட்ட இருவர் கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
ரூ.65 லட்சம் மதிப்புள்ள சொத்தினை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த 2 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை, மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் (63). அவருக்கு சொந்தமாக சென்னை பள்ளிக்கரணை, கண்ணதாசன் நகரில் 2,400 சதுரடி நிலம் உள்ளது. சுமார் ரூ. 65 லட்சம் மதிப்புள்ள இந்தச் சொத்தினை சந்துரு, பெருமாள் உள்ளிட்ட நபர்கள் சேர்ந்து பொய்யான ஆவணங்கள் தயார் செய்து சொத்தினை அபகரித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 01.10.2024 அன்று புகார் அளித்தார்.
கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா வழிகாட்டுதலின் பேரில், உதவி ஆணையாளர் வரதராஜன், ஆய்வாளர் முருகேஸ்வரி புலன் விசாரணை நடத்தினர். அதனையடுத்து மேற்கண்ட ஆள்மாறாட்டம் செய்து, போலியான பத்திரங்களை பதிவு செய்த குற்றத்தில் தொடர்புடைய சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்ததைச சேர்ந்த சந்துரு என்பவரை கடந்த 07.07.2025 அன்றும், பெருமாள், 42 என்பவரை நேற்று (08.07.2025) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எதிரிகள் சந்துரு மற்றும் பெருமாள் ஆகிய இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற தலைமறைவு எதிரிகளை பிடிக்க காவல்குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெருநகரில் சொத்துக்கள் வாங்கும் நபர்கள், விற்பனை செய்யப்படும் நிலத்தின் ஆவணங்களை சம்மந்தப்பட்ட சார்பதிவாளர் மற்றும் வருவாய் துறை அலுவலகங்களில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து சொத்துக்கள் வாங்கிட சென்னை பெருநகர காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.