ரூ. 6 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்து 12 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கொடுங்கையூர், கடும்பாடியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது குடும்பத்திற்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கம், ரெங்கராஜபுரம் மெயின் ரோடு, புலியூர் கிராமத்தில் 2 கிரவுண்ட் 932 சதுர அடி நிலம் உள்ளது. ரூ. 6 கோடி மதிப்புள்ள இந்தச் சொத்தை தங்கமணி, டேனியல்குமார், சிவா, விஜயகுமார் ஆகியோர் நிலத்தின் உரிமையாளர் போன்று ஆள்மாறாட்டம் செய்த சரவணன் உட்பட சிலர் கூட்டு சேர்ந்து ஆள்மாறாட்டம் மற்றும் போலியான ஆவணங்கள் தயார் செய்து வில்லங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் சென்னை சூளைமேடு மற்றும் அண்ணாநகரை சேர்ந்த எதிரிகள் விஜயகுமார் மற்றும் சரவணன் ஆகியோர்களை கடந்த 2013-ம் வருடம் மே மாதம் ஏற்கனவே கைது செய்தனர். மேலும் மற்றொரு முக்கிய எதிரியான சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தினில்குமார் என்பவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா வழிகாட்டுதலின் படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
அவரைத்தேடி வந்த நிலையில் தினில் குமார் பல இடங்களில் அவ்வப்போது தன் இருப்பிடத்தை மாற்றி வசித்து வந்த நிலையில் தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சென்னை சைதாப்பேட்டையில் வைத்து தினில்குமாரை தனிப்படை போலீசார் இன்று (09.07.2025) கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் அடைக்கப்பட்டார்.