திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: ஜாதி அடையாளங்களுடன் வருவதற்கு அனுமதியில்லை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

152

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எஸ்பி பாலாஜி சரவணன் மேற்பார்வையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

அது தொடர்பான விவரம் வருமாறு:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும் மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும், வாகனங்கள் வரும் வழிப்பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், பக்தர்கள் வந்து செல்லும் வழிகள், கோவில் வளாகம், கடற்கரை பகுதி, ஆகிய அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சீருடை அணிந்த மற்றும் சாதாரண உடையணிந்த ஆண், பெண் காவலர்களை பணியமர்த்தியும் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திருவிழாவை முன்னிட்டு வரும் பக்தர்கள் ஜாதி சின்னங்களுடன் கூடிய கொடியோ, தொப்பி மற்றும் ரிப்பன்களையோ ஜாதி ரீதியான உடைகளை அணிந்து வரவோ எவ்வித அனுதியுமில்லை. மேலும் வன விலங்கு பாதுகாப்பு சட்டப்படி இத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சர்ப்ப காவடி மற்றும் பாம்புகள் எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது.

வாகனங்களில் வரும் பக்தர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் காவலர்கள் காட்டும் வழிமுறைகளை கடைபிடித்து அந்தந்த வாகன நிறுத்துமிடங்களில் தங்கள் வாகனங்களை மற்ற வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தம் செய்யுமாறும், பொது மக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.