சென்னை அம்பத்தூரில் ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 1 கோடி நிலத்தை மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவில் அண்ணாநகர், கிழக்கைச் சேர்ந்த அருணா கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதியன்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘சென்னை, கொரட்டூர், புத்தகரம், ஸ்ரீலட்சுமி அம்மன் நகரில் 1,800 சதுரடி நிலத்தை துரைசாமி அவரது மனைவி நவனிதாம்மாள் பவர் ஏஜெண்டான ஆறுமுகசாமி என்பவர் மூலம் 1991ம் ஆண்டு நான் அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் பெற்றேன். எனது அனுபவத்தில் அந்த நிலம் இருந்து வந்த நிலையில் நான் எனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் இருந்து வந்தேன். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆன்லைன் மூலமாக எனது இடத்தை சரி பார்த்ததில் லோகநாதன் என்பவர் பெயருக்கு மாறியிருப்பதை அதிர்ச்சியடைந்தேன். என்னைப் போன்று அருணா என்ற போலியான நபரைக் கொண்டு லோகநாதன் என்பவருக்கு விற்பனை செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது’’. என அந்தப்புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார். அதன்படி நிலமோசடி தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அருணாவிடம் நில மோசடி செய்யப்பட்டது உண்மை என்பது தெரியவந்தது. அதனையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட சென்னை காவங்கரையைச் சேர்ந்த லலிதா (54), புத்தகரம், ஹரிகோபால் (46), மாரிமுத்து (54) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் துரித விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு தனிக்குழுவினரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.