சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில், 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 77.43 கிலோ கஞ்சா, 813 கிராம் மெத்தம்பெட்டமைன், 75 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 2 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 28.04.2023 முதல் 04.05.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 18 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 77 கிலோ 430 கிராம் எடை கொண்ட கஞ்சா, 813 கிராம் மெத்தம்பெட்டமைன், 75 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 2 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் குறிப்பிடும்படியாக, வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/ Washermenpet) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 02.05.2023 அன்று மதியம், N-4 மீன்பிடிதுறைமுகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்.என்.செட்டி தெரு மற்றும் ஜீரோ கேட் சந்திப்பு அருகே கண்காணித்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரிடம் விசாரணை செய்த போது, இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின் பேரில், அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த ஆந்திரா விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த அர்லே மணிகண்டா (22), போத்ராஜு ஷேசு (32) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, (PEW/Anna Nagar) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 03.05.2023 அன்று நொளம்பூர், புதிய பாலம், கூவம் ஆறு அருகே கஞ்சா வைத்திருந்த அன்னனூர் நவநீதகிருஷ்ணன் (எ) கண்ணன் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா, 1 செல்போன் மற்றும் 1 எடை மெஷின் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் 01.05.2023 அன்று அல்லிக்குளம், லிங்க் ரோட்டில் கஞ்சா வைத்திருந்த நென்குன்றம் ஆகாஷ் (22) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 8.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தண்டையார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 30.04.2023 அன்று தண்டையார்பேட்டை, சுனாமி குடியிருப்பு கண்காணித்து அங்கு விற்பனைக்காக மெத்தம்பெட்டமைன் போதை பொருள் வைத்திருந்த ஜான் (எ) ஜான்சன், வ/28, த/பெ.பாஸ்கர், எண்.381, F-பிளாக், சுனாமி குடியிருப்பு, தண்டையார்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 813 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 28.04.2023 அன்று நுங்கம்பாக்கம், சுடுகாடு பகுதியில் சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்த ராஜு சூளைமேடு (27), சேத்துப்பட்டு அஜய்குமார் (27), ஆந்திரா சாந்தி ப்ரியா (22) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா, 75 நைட்ரோவிட் உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 686 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,529 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு இதுவரையில் மொத்தம் 807 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. காவல் குழுவினரின் தொடர் முயற்சியில் 28.04.2023 முதல் 04.05.2023 வரையிலான ஒரு வாரத்தில் கஞ்சா வழக்கு குற்றவாளிகளின் 8 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.