கடந்த 2008ம் ஆண்டு, மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசி, சதி தீட்டம் தீட்டியது தொடர்பாக, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, 5 குற்றவாளிகளில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து DVD Writer -13, குறுந்தகடுகள் (CDs)-200 பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி தவுபீக் அமீது என்பவர் 2011ம் ஆண்டு, குற்றச் செயலில் ஈடுபட்டு, பூந்தமல்லி கிளை சிறைச்சாலையில் இருந்தபோது, கைது செய்யப்பட்டார். பின்னர் பிணையில் வெளியே வந்த தவ்பீக் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த நிலையில் பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால், இவர் மீது 2021ம் ஆண்டு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், இவர் மீது சென்னையில் கொடுங்கையூர், எஸ்பிளனேடு, முத்தியால்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களிலும், மீஞ்சூர், திருச்சி அதிராம்பட்டிணம், உத்தமநல்லூர் ஆகிய காவல் நிலையங்களிலும், வெளிமாநிலங்களான கேரளா, மும்பை மாநில காவல் நிலையங்களிலும், கொலை, வெடிபொருள் வைத்திருந்தது, ஆட்கடத்தல் உள்ளிட்ட 14 குற்ற வழக்குகள் உள்ளதும், தௌபீக் அமீது தலைமறைவாகி வெளி நாட்டில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.
அதன்பேரில், காவல் குழுவினர் தௌபீக் அமீது மீது சென்னை விமான நிலையத்தில் Look Out Circular (LOC) நோட்டிஸ் கொடுத்து கண்காணித்து வந்த நிலையில், தௌபீக் அமீது கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தபோது, குடியுரிமை அதிகாரிகள் உதவியுடன் தௌபீக்கை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தௌபீக் அமீது விசாரணைக்குப் பின்னர் நேற்று (24.07.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.