புத்தாண்டின் போது பைக்கில் வீலிங் செய்தால் கடும் நடவடிக்கை தாம்பரம் காவல் ஆணையரகம் எச்சரிக்கை

152

புத்தாண்டு கொண்டாட்டத்தின் கிழக்கு கடற்கரைச் சாலைகளில் பைக்கில் வீலிங் செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார். மேலும் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் புத்தாண்டை கொண்டாடுவதற்கும் 3,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு விவரம்:

2024 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் மகிழ்ச்சியுடன் அமைவதற்கு தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் வழிபாட்டு தலங்கள் கடற்கரைகள், மற்றும் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இணைக் கமிஷனர் மூர்த்தி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் தலைமையில் அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 3000 பேர் பாதுகாப்பு பணியல் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 160 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 31.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரவு 09.00 மணியிலிருந்து முக்கியமான சாலைகளான ECR சாலை, OMR சாலை, வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை, மேடவாக்கம் – வேளச்சேரி பிராதான சாலை, 200 அடி ரேடியல் சாலை, GST சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, வண்டலூர் வெளிவட்டச் சாலை மற்றும் மணிமங்கலம் ரோடு ஆகிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அதிவேக செல்வோர்களையும், பொது மக்களுக்கு இடையூறாகவும், சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு பாதகம் ஏற்படுத்துவோர்களையும் தடுக்க மொத்தம் 150 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 20 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வேண்டிய உதவிகளை மேற்கொள்வார்கள். புத்தாண்டு கொண்டாடத்திற்கு அனுமதி பெற்ற கேளிக்கை விடுதிகள் மற்றும் ஹோட்டல்ளில் புத்தாண்டு கொண்டாடத்தின் போது கடைபிடிக்க வேண்டிய நன்னடத்தை விதிகளை பின்பற்றுமாறும், பட்டாசு வெடிப்பது, நீச்சல் குளத்தில் குளிப்பது மற்றும் போதை வஸ்த்துக்களை பயன்படுத்துவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. ECR சாலை, OMR சாலை, மதுரவாயல் பைபாஸ் சாலை, GST சாலை மற்றும் வண்டலூர் வெளிவட்ட சாலை போன்ற பகுதிகளில் இருசக்கரம் (Bike Race) மற்றும் மூன்று சக்கர (ஆட்டோ) வாகன பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக 12 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் உள்ள 300 முக்கிய வழிபாட்டுதலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31.12.2023 மாலை முதல் 01.01.2024 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், கோவளம், முட்டுக்காடு, பனையூர், நைனார் குப்பம், உத்தண்டி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மணல் பகுதியிலும் தற்காலிக தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மேலும் குற்றத் தடுப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படும்.

கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மீனவர்களுடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

குற்றத் தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும். Mobile Surveillance Team எனப்படும் குழுக்கள் அமைக்கப்பட்டு Tata Ace போன்ற வாகனங்களில் PA.System, Flickering Light போன்றவை பொருத்தியும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனம் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும். பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தாம்பரம் மாநகர காவல் துறையினர், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து பொதுமக்கள் புத்தாண்டை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மேலும், தாம்பரம் மாநகர காவல் துறையின் அறிவுரைகளை கடைபிடித்து புத்தாண்டை கொண்டாடுமாறு பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் தாம்பரம் மாநகர காவல் துறையினருடன் கைகோர்த்து 2024 ஆம் ஆண்டு புத்தாண்டினை இனிதாக வரவேற்போம் என தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.