13 கிலோ கஞ்சாவுடன் தேனி ஆசாமி உள்பட இருவரை மடக்கிய தாம்பரம் காவல் ஆணையரக போலீசார்

166

தாம்பரம் காவல் ஆணையரகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யச்சென்ற இருவரை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து 13 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா புழக்கத்தை அறவே ஒழிக்கும் பொருட்டு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் இணைக்கமிஷனர் மூர்த்தி மேற்பார்வையில் தாம்பரம் மதுவிலக்கு பிரிவு உதவி ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினர் தாம்பரம் பகுதியில் தீவிரமாக கண்காணித்தைனர். அப்போது தாம்பரம் ரயில்வே நிலையம் அருகே உள்ளே பேருத்து நிறுத்தத்தில் சிலர் கஞ்சா வாங்கி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் பேருந்து நிறுத்தம் அருகில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு நின்றிருந்த இரண்டு நபர்களை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர்.

அவர்களுடைய உடைமைகளை சோதனை செய்ததில் அதில் 5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 13.500 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்களில் ஒருவர் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, வருசநாட்டைச் சேர்ந்த ஈஸ்வரன் (63) என்றும் மற்றொருவர் சென்னை கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த பாலராமச்சந்திரன் (53) என்பதும் தெரியவந்தது. கஞ்சாவை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்திலிருந்து வாங்கிவந்து தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும், கல்லூரி மாணவர்களுக்கும் சில்லறை விற்பனைக்கும் எடுத்துச் செல்வதாக இருவரும் வாக்குமூலம் அளித்தனர். இது தொடர்பாக தாம்பரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரை கமிஷனர் அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.