ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற தமிழக சிறைத்துறை வாரிசுகள் சிறைத்துறை இயக்குநர் அமரேஷ் புஜாரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகள் தேசிய அளவிலான தற்காப்பு கலையான கராத்தே போட்டிகள், ஹரியானா மாநிலத்தில் உள்ள குருச்சேத்திரா பல்கலைக்கழகத்தில் 25.08.2023 முதல் 27.08.2023 வரையில் நடத்தப்பட்டன. அப்போட்டியில் ஏழு பேர் கலந்து கொண்டு அனைவரும் பதக்கங்களை வென்றனர். அதில் 3 தங்கப்பதக்கங்களும், 1 வெள்ளி பதக்கமும், 3 வெங்கலப் பதக்கங்களும் பெற்றுள்ளனர். புழல் மத்திய சிறையில் பணியாற்றும் சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் 5 பதக்கங்களையும், மதுரை மத்திய சிறையில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகள் 2 பதக்கங்களையும் வென்றுள்ளனர்.
தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி பதக்கங்களை வென்ற சிறைப் பணியாளர்களின் வாரிசுகளை நேரில் அழைத்து பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை டிஐஜிக்கள் கனகராஜ், முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர். பதக்கம் வென்ற சிறைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு பயிற்சி அளித்த முதல் நிலைக்காவலர் எஸ். ராஜரத்தினம், தலைமைக்காவலர் மாரிசெல்வம் ராஜேஷ்வரன், பயிற்சி ஆசிரியர் மற்றும் ஆர். பவானி, ஊட்டச்சத்து ஆலோசகர் ஆகியோருக்கும் டிஜிபி அமரேஷ் புஜாரி வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.