நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க சிறப்பு போலீஸ் ரோந்து: தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ்
பொங்கலை முன்னிட்டு வெளியூர் பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பஸ் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கண்காணிக்க சிறப்பு ரோந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (15.01.2024) ஆம் தேதி காலையில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் இணைந்து தாம்பரம் மாநகர காவல் ஆளிநர்களுடன் தாம்பரம் மாநகர ஆயுதப்படையில் பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடினார். அதனையடுத்து பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தாம்பரம் காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:
பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் கோவில் மற்றும் சுற்றுலா தளங்களான வண்டலூர் உயிரியல் பூங்கா, மால்கள், கடற்கரைகள், போன்ற இடங்களில் எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தாம்பரம் மாநகர காவல் சார்பாக 1200 காவல் ஆளிநர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு பொதுமக்கள் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் அந்தந்த சரக காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொங்கல் மற்றும் காணும் பொங்கல் அன்று சுற்றுலா தளங்கள் மற்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய போதிய அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் குடிபோதையில் வாகன ஓட்டுவது மற்றும் பெண்கள் குழந்தைகள் எதிரான செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.