ஆவடி அருகே சித்த மருத்துவர், அவரது மனைவி இருவரும் வீட்டில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டச் சம்பவத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை, மிட்டனமல்லி, காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவன் நாயர் (வயது 72). சித்த மருத்துவர். இவர், வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பிரசன்னகுமாரி (60). மத்திய அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணம் ஆகி தனித்தனியாக வசிக்கின்றனர்.
இதனால் சிவன் நாயர், பிரசன்னகுமாரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். நேற்று 28.04.2024 இரவு சிவன்நாயர், அவரது மனைவி பிரசன்னாகுமாரி இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தடயங்களையும் சேகரித்தனர். அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து கொலையாளிகளை தேடினர்.
அதனையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் ஆவடி போலீஸ் துணை கமிஷனர் ஐமன் ஜமால் மற்றும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றவர்கள், வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றார்களா என்றும், குடும்பத்தகராறு காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்திலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், கொலை நடை பெற்ற இடத்தில் செல்போன் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்டது. அதனையடுத்து சந்தேகத்தின் பேரில் மகேஷ் என்பவரை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதனையடுத்து அவர் பணத்துக்காக சிவன் நாயரையும், பிரசன்னாவையும் கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்து ஆவடி காவல் ஆணையரகம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில், 28.04.24 அன்று சித்த மருத்துவரான சிவ நாயர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவத்தை பற்றிய இறந்தவர்களுடைய மகனான சித்த மருத்தவர் ஹரி ஓம் கொடுத்த தகவல் அடிப்படையில், சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் CCTV காட்சிகளின் அடிப்படையில் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் (20) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் மகேஷை கைது செய்யும்போது அவர் அணிந்திருந்த ஆடைகளின் மீது படிந்திருந்த ரத்த கறை மற்றும் கொலை செய்யும்போது அவர் பயன்படுத்திய கத்தியால் எதிரியானவரின் கையில் ஏற்பட்ட காயம் மற்றும் அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்படி சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்தது மகேஷ் தான் என்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் மகேஷ் 2019 ஆண்டு முத்தாபுதுப்பேட்டையில் இருந்த ஹார்டு வேர், வேலை செய்த போது சித்த மருத்துவர் சிவ நாயரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் சிவ நாயரிடம் நெருக்கம் ஏற்படுத்தி கொண்டு அடிக்கடி அவரது வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்துள்ளார். மகேஷின் நடவடிக்கை சரியில்லாததால் சிவ நாயரின் மனைவி பிரசன்னா தேவி கண்டித்துள்ளார், இதனைப்பற்றி தனது மகனிடமும் பல முறை கூறியுள்ளார். சம்பவ நாளான நேற்று மகேஷ் கொலையுண்ட சித்த மருத்துவர் மற்றும் அவருடைய மனைவி அவர்கள் தனிமையில் இருப்பதை தெரிந்து கொண்டு எதிரி மகேஷ் அவருடைய இல்லத்திற்குள் அத்து மீறி சென்றுள்ளார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் எதிரி மகேஷ் பிரசன்னா தேவியை கத்தியால் காயப்படுத்தி கொலை செய்துள்ளார். அதனை தடுக்க வந்த சிவ நாயரையும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளது தெரிவந்துள்ளது.